
மொழி குறைபாடு காரணமாக மாணவர்கள் படிப்பை நிறுத்தி வந்த தடைகளைப் புதிய கல்விக் கொள்கை ஒழிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2023-ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இது பிரதமரின் 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி. கல்விக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது குறித்து எடுத்துரைத்தார். மனதின் குரல் நிகழ்ச்சியின் 108-வது அத்தியாயம், செயற்கை நுண்ணறிவு குறித்தும் பிரதமர் பேசினார்.
பிரதமர் கூறியதாவது:
"நமது நாட்டில் நிறைய குழந்தைகள் மொழி குறைபாடு காரணமாக கல்வியைப் பாதியிலேயே கைவிடுகிறார்கள். எந்தவொரு குழந்தையின் கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இதுமாதிரியான விஷயங்களை நீக்குவதற்குப் புதிய கல்விக் கொள்கை உதவுகிறது. குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு மொழி ஒரு தடையாக மாறிவிடக் கூடாது என்பதே எங்களுடைய முயற்சி.
நமது பயணத்தின் 108-வது அத்தியாயம் இது. எனக்கு 108 என்கிற எண் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதன் முக்கியத்துவம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது.
ஒரு ஜெபமாலையில் 108 மணிகள், 108 முறை உச்சரிப்பது, 108 ஆன்மிகத் தலங்கள், கோவில்களில் 108 படிக்கட்டுகள், 108 மணிகள் என 108 என்ற எண் அபரிமிதமான நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதனால்தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் 108 அத்தியாயம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது
காசி தமிழ்ச் சங்கமம் மேடையில் நான் ஹிந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், பாஷினி எனும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நிகழ்ச்சியில் இருந்த தமிழ் மக்களாலும் எனது உரையைப் பின்தொடர முடிந்தது. இந்தத் தொழில்நுட்பத்தை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களில் விரிவாகப் பயன்படுத்தத் தொடங்கினால், அது ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர மாற்றத்தை நினைத்துப் பாருங்கள்" என்றார் பிரதமர் மோடி.