மன தைரியம் மற்றும் துணிச்சலின் நிலமாக மணிப்பூர் மாநிலம் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் ரூ. 8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரின் இம்பால் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் வானிலை பாதிப்பு காரணமாக இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு சாலை மார்க்கமாகச் சென்றார்.
அங்கு, ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதை ஒட்டி ரூ. 1,200 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
அனைத்து குழுக்களும் தங்கள் கனவுகளை நிறைவேற்றவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று, நான் உங்கள் பக்கம் நிற்பதாக உறுதியளிக்கிறேன். இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் நிற்கிறது.
மணிப்பூர் எப்போதுமே நம்பிக்கையின் பூமியாக இருந்து வருகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது வன்முறையின் கடினமான கட்டத்தைக் கடந்து சென்றது. முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தேன். அவர்களுடனான உரையாடலுக்குப் பிறகு,நம்பிக்கையின் புதிய விடியல் மணிப்பூரின் கதவுகளைத் தட்டுகிறது என்று என்னால் சொல்ல முடியும்.
எந்தவொரு பிராந்தியத்திலும் அதன் வளர்ச்சிக்கு அமைதி முக்கியம். கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. மக்கள், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மலைகள், பள்ளத்தாக்குகளில் பல குழுக்களுடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதில் நான் திருப்தி அடைகிறேன். அமைதியை நிலைநாட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது.
வீடற்றவர்களுக்கு, 7,000 வீடுகளைக் கட்டுவதற்கு நாங்கள் உதவி வழங்குகிறோம். ரூ. 3000 கோடி சிறப்புத் தொகுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் துடிப்பு இந்தியாவிற்கு ஒரு பெரிய பலமாகும். மணிப்பூரின் பெயரிலேயே 'மணி' (முத்து) உள்ளது. இந்தியாவைப் பிரகாசிக்க வைக்கும் 'மணி' இதுதான். இந்திய அரசாங்கம் மணிப்பூரை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல எப்போதும் முயற்சித்து வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு, சுமார் ரூ. 7,000 மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் மலைகளில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் புதிய சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை உருவாக்கும்.
எல்லைகளை ஒட்டி மணிப்பூர் அமைந்துள்ளது, இங்கு இணைப்பு ஒரு சவாலாக உள்ளது. மோசமான சாலைகள் காரணமாக நீங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை நான் புரிந்துகொள்கிறேன், அதனால்தான், 2014க்குப் பிறகு, மணிப்பூரில் மற்ற பகுதிகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன். இதற்காக அரசாங்கம் இரண்டு கட்டங்களாகப் பணியாற்றியுள்ளது. முதலாவதாக, மணிப்பூருக்கு, நாங்கள் ரயில் மற்றும் சாலை பட்ஜெட்டுகளை விரைவாக உயர்த்தினோம், இரண்டாவதாக, நகரங்களுடன் கிராமங்களில் உள்ள சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். கடந்த சில ஆண்டுகளில், மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 3,700 கோடி செலவிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ரூ. 8,700 மதிப்பிலான நெடுஞ்சாலைகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
PM Modi | Manipur Violence | Manipur Riots | Manipur |