மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

புதிய முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராகச் செயல்படுமாறு பிரேன் சிங் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
ANI
1 min read

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் இன்று அளித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதன்முறையாக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை வெடித்ததிலிருந்தே பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே, இந்த வன்முறையைக் காரணம் காட்டி கடந்த சில நாள்களாகவே பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் தலைமை மாற்றம் தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மொத்தம் 46 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளார்கள். கட்சிக்குள் பிரேன் சிங்குக்கு இருக்கும் ஆதரவு குறித்த முக்கியமான கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

அதிருப்தியில் உள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரேன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடவுள்ள நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று பேச்சுகள் இருந்தன. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், கட்சியின் கொறடா உத்தரவை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீறலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இவற்றுக்கு மத்தியில் சனிக்கிழமை தில்லி சென்ற பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமித் ஷாவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, மணிப்பூர் திரும்பிய பிரேன் சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், புதிய முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராகச் செயல்படுமாறு பிரேன் சிங் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in