
பாஜக தலைவரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, தெருநாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் இன்று (ஆக. 22) பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று, அதை அறிவியல்பூர்வமான தீர்ப்பு என்று கூறியுள்ளார்.
அதேநேரம் ஆக்ரோஷமான நாய் என்றால் என்ன என்பது குறித்து நீதிமன்றம் தெளிவாக வரையறுக்கவில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.
தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பிய தெருநாய்கள் குறித்து முன்பு பிறக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 22) திருத்தியமைத்துள்ளது.
இதன்படி, தடுப்பூசி செலுத்தல் மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு சம்மந்தப்பட்ட தெருநாய்களை அவை வசித்து வந்த அதே பகுதிகளில் விடுவிக்கவேண்டும் என்றும், ரேபிஸ் பாதிப்பு அல்லது ஆக்ரோஷமான நடத்தைகொண்ட நாய்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு அவை பிரித்யேக காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மேனகா காந்தி பேசியதாவது,
`இந்த அறிவியல்பூர்வமான தீர்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இடமாற்றம் மற்றும் பயம் மட்டுமே நாய்கள் கடிப்பதற்கான காரணங்கள். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை விடுவிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.
ஆக்ரோஷமான நாய் என்றால் என்ன என்பதை நீதிமன்றம் வரையறுக்கவில்லை, இது வரையறுக்கப்படவேண்டும்... (குறிப்பிட்ட உணவளிக்கும் பகுதிகளை உருவாக்குவதற்கான உத்தரவு) முற்றிலும் சரியானது. அவர்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) அத்தகைய பகுதிகளுக்கான அடையாள பலகைகளையும் வைக்கவேண்டும்’ என்றார்.
மேலும், `தங்களது தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது... (இந்த) உத்தரவின்படி, மாநகராட்சிகள் முறையான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை அமைக்கவேண்டும். 25 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த திட்டத்திற்காக ரூ. 2,500 கோடியை ஒதுக்குவதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது’ என்றார்.