
உலகின் மிகவும் தனித்த மற்றும் அபாயகரமான பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்தமான்-நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்த அமெரிக்க சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டுள்ளார். தீவிற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல், அங்கு ஒரு கோககோலா புட்டியையும், தேங்காயையும் அவர் விட்டுவிட்டுத் திரும்பியுள்ளார்.
அந்தமான்–நிக்கோபார் தீவுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு சென்டினல் தீவில் சென்டிலினீஸ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். வெளி உலகத்துடன் எந்த ஒரு தொடர்பையும் அவர் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாததால், அந்த தீவிற்குள் நுழைய வெளியாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைசியாகக் கடந்த 2018-ல், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலென் சாவ் என்பவர் இந்த தீவிற்குள் அத்துமீறி நுழைந்தபோது, சென்டிலினீஸ் பழங்குடியினரால் அவர் கொல்லப்பட்டார். இப்பொது வரை அவரது உடலை மீட்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வடக்கு சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைந்த 24 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த மைகெய்லோ பொல்யாகோவ் என்பவரை சிஐடி காவல்துறையினர் கடந்த மார்ச் 31 அன்று கைது செய்தார்கள். வடக்கு சென்டினல் தீவில் வைத்து அவரது காமெராவில் பதிவு செய்யப்பட்ட காணொளியின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 26-ல் போர்ட் பிளேர் வந்திறங்கிய பொல்யாகோவ், கூர்மா தேரா பீச்சில் இருந்து மார்ச் 29 அன்று நள்ளிரவு 1 மணி அளவில் தனி படகில் வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை 10 மணி அளவில் தீவின் கரையை அடைத்துள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, பிறகு மீண்டும் கூர்மா தேரா பீச்சுக்குத் திரும்பியுள்ளார். மேலும், அங்கு ஒரு கோககோலா புட்டியையும், தேங்காயையும் அவர் விட்டுவிட்டுத் திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அந்தமான்-நிக்கோபார் டிஜிபி ஹெச்.எஸ். தாலிவால், `அவரைப் பற்றியும், தடை செய்யப்பட்ட பழங்குடியினப் பகுதிக்குச் செல்ல நினைத்த அவரது நோக்கம் பற்றியும் கூடுதல் விவரங்களை சேகரித்து வருகிறோம்.
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் அவர் தங்கியிருந்தபோது, வேறு எங்கெல்லாம் சென்றார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். போர்ட் பிளேரில் அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்றார்.