
வரதட்சணைக் கொடுமையில் பெண் எரித்துக்கொல்லப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தப்பியோட முயற்சித்த கணவரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளார்கள்.
நிக்கி மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் விபின் மற்றும் அவருடைய சகோதரர் ரோஹித் ஆகியோரை முறையே திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். விபின் மற்றும் நிக்கி பாடி இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் எனத் தெரிகிறது. மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள விபின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நிக்கியை அடித்துத் துன்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
வரதட்சணைக்காகவே தன் மகள் துன்புறுத்தப்பட்டு வந்ததாக, உயிரிழந்த நிக்கியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
நிக்கியின் தந்தை பிகாரி சிங் கூறியதாவது:
"என் மூத்த மகள் என்னை அழைத்து நடந்ததைக் கூற முயற்சித்தார். நாங்கள் மருத்துவமனை சென்று பார்த்தோம். அவர்கள் (நிக்கியின் கணவர் வீட்டார்) தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்கள்.
அருகிலிருந்தவர்கள் மகளை அழைத்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். நாங்கள் சென்றடைந்தபோது, 70 சதவீத தீக்காயங்களுடன் இருந்தார். இந்த மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்க முடியாததால், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு என் மகள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்கள்.
அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். என் இரு மகள்களையும் ஒரே குடும்பத்தில் தான் கட்டிக்கொடுத்துள்ளேன். என் பேரன் நடந்தவற்றை எப்படி நிகழ்ந்தது என அனைவரிடமும் கூறியுள்ளான்" என்றார் அவர்.
இதுதொடர்பாக, விபின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தப்பிக்க முயன்றதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவருடைய கால்களில் சுட்டு அவரைப் பிடித்துள்ளார்கள்.
விபினின் தாயார் தயா, தந்தை சத்யவீர் மற்றும் சகோதரர் ரோஹித் ஆகியோர் தலைமறைவாக இன்னும் உள்ளார்கள்.
நிக்கியின் தந்தை என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்தபோது, "அவர்கள் கொலைகாரர்கள். அவர்கள் சுடப்பட வேண்டும்" என்று பேசினார். இவர் கூறிய சில மணி நேரங்களில் நிக்கியின் கணவர் தப்பியோட முயற்சிக்க, காவல் துறையினர் அவரைச் சுட்டுப்பிடித்துள்ளார்கள்.
Dowry | Dowry Case | Nikki | Vipin | Encounter | Police Shoot Out |