மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களைப் பரப்பி வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கதேச எல்லையில் இரு தேர்தல் பிரசாரங்கள் உள்பட மேற்கு வங்கத்தில் மொத்தம் 3 தேர்தல் பிரசாரங்களை ராஜ்நாத் மேற்கொண்டார்.
மால்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
"மேற்கு வங்க மக்கள் மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மமதா பானர்ஜி பொய்களைப் பரப்பி வருகிறார். குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் பொய்களைப் பரப்புகிறார்.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே குடியுரிமை திருத்தச் சட்டம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என மமதா கூறுகிறார். மேற்கு வங்க மக்களிடம் எதற்காக அவர் பொய் பேசி வருகிறார். உண்மையைப் பேசிகூட அரசியல் செய்யலாம்.
எந்தவொரு சக்தியாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. யாராலும் அதைத் தடுக்க முடியாது" என்றார் ராஜ்நாத் சிங்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019-ல் மேற்கு வங்கத்தில் நல்ல முன்னேற்றம் கண்ட பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ல் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.