
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அம்மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் ஒரு மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தினார்.
கொட்டும் மழைக்கு இடையே சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் `பாஜக, ச்சி ச்சி’ (பாஜகவினரே வெட்கமாக இல்லையா?) என்ற கோஷங்கள் எதிரொலித்தன. ஏறத்தாழ 1,500 காவல்துறையினர் பேரணிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புலம்பெயர்ந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒடிஷாவில் தடுத்து நிறுத்தியது, மொழியை முன்வைத்து தகவல்களை சேகரித்தது, தில்லியில் இருந்து வங்காள மொழி பேசும் மக்களை வெளியேற்றியது என அண்மையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மோதலுக்கான காரணமாக மாறியுள்ளது.
குறிப்பாக, ஒடிஷாவின் ஜார்சுகுடாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த 444 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதே இந்த பேரணிக்கான தூண்டுதலாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அவர்களில் சுமார் 200 பேர் வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
பிரம்மாண்ட பேரணிக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மமதா பானர்ஜி,
`சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டவர்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் வைக்குமாறு பாஜக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடருவோம்.
வங்காள மொழி பேசும் அனைவரையும் எப்படி சிறைக்கு அனுப்புவீர்கள்? மேற்கு வங்காள குடிமக்களுக்கு அடையாள அட்டைகள் உள்ளன. திறமைகள் இருப்பதால் அவர்கள் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வங்காள மொழி பேசும்போது கைது செய்யப்படுகிறார்கள்.
அதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? வங்காளம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?’ என்றார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமார் 22 லட்சம் எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்ப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கொல்கத்தாவின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில், அபிஷேக் பானர்ஜி உள்பட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் கலந்துகொண்டதால், இது ஒற்றுமையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற மோதல்கள் குறித்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.