
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பைக் கூண்டோடு கலைப்பதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
இது தொடர்பாக நேற்று (நவ.6) அறிவிப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், `ஹிமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி ஆகிய முழுவதையும் உடனடியாகக் கலைத்து காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.
நடந்து முடிந்த 18-வது மக்களவை பொதுத்தேர்தலில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றைக் கூட காங்கிரஸ் கட்சி கைப்பற்றவில்லை. அதே நேரம் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. கடந்த 2022 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அம்மாநில கட்சி அமைப்பில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரதீபா சிங், `ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் தொடருமாறு என்னை கேட்டுக்கொண்டனர். மாநில காங்கிரஸ் கமிட்டி, மற்றும் மாவட்ட, வட்டார கட்சி அமைப்புகளை கலைக்குமாறு நான் நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வந்தேன். மாற்றம் என்றுமே நல்லது’ என்றார்.
6 முறை ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்த வீரபத்திர சிங்கின் மனைவியான பிரதீபா சிங், கடந்த 2022-ல் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது மகன் விக்ரமாதித்ய சிங் தற்போது அம்மாநில அரசின் பொதுப்பணி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகளின் அமைச்சராக உள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து கட்சி கொறடாவின் உத்தரவை மீறி நிதி மசோதாவுக்கு வாக்களிக்காத காரணத்தால் அந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்து உத்தரவிட்டார் அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர்.