பிஹாரில் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்க மாட்டார்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் | Mallikarjun Kharge |

நிதிஷ் குமாரை பாஜக தொடர்ச்சியாக மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது...
பாட்னாவில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பு
பாட்னாவில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பு
2 min read

பிஹாரில் நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 அன்றும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன்படி காங்கிரஸ் - ஆர்ஜேடி இணைந்துள்ள மகாகட்பந்தன் கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாட்னாவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

“நிதிஷ் குமார் பிஹாரில் உள்ள பெண்களுக்கு ரூ. 10,000 -ஐ வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர்கள் வாக்கு பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பிஹார் மக்கள் புத்திசாலிகள். ரூ. 10,000 என்ன ரூ. 10 லட்சம் கொடுத்தாலும் அவர்கள் சிந்தித்துதான் வாக்களிப்பார்கள். பெண்களுக்கு ஊக்கத்தொகை தர வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு 20 ஆண்டுகளாகத் தோன்றவில்லை. பிரதமர் மோடிக்கு 11 ஆண்டுகளாக தோன்றவில்லை. இதிலிருந்தே இவையெல்லாம் வெறும் தேர்தல் கால வாக்குறுதி என்பதைக் காட்டுகிறது. அவர்கள் பிஹார் மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டார். பள்ளிகளை நாசமாக்கி விட்டார்கள். மத்திய அரசில் பல்கலைக்கழகங்கள், காவல்துறை, மத்திய காவல்துறை, ரயில்வே என 50 லட்சம் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன. அதையெல்லாம் நிரப்பாதவர்கள் இங்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று பேசுகிறார்கள். அதனாலேயே மக்கள் இந்தமுறை அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். பிஹாரில் ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கலாம். ஆனால் அரசியல் தெளிவு மிக்க மக்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களுக்கு யாருக்கு எப்போது எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும்.

நேற்று பிஹாரில் ஒரு ரோடு ஷோ நடந்தது. அழகழகான படங்கள் வெளியாகின. ஆனால் அதில் பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் காணப்படவில்லை. அவர் அந்த பேரணையில் பங்கேற்கவேயில்லை. பாஜக அவரை மறைத்துவிட்டார்கள். அவரை முதல்வர் என்று கூடக் குறிப்பிடவில்லை. இது தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. கடந்த முறைகளைப் போல இந்தமுறையும் தான் முதல்வர் ஆகிவிடுவேன் என்று நிதிஷ் குமார் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாஜக அவரை மறைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் எத்தனைமுறை முதல்வர் ஆனாலும் பிஹார் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை” என்று பேசினார்.

முன்னதாக வைஷாலி பகுதியில் பிரசாரத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோதும் “20 ஆண்டுகளாக உங்கள் காட்டு ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் செய்ய முடியாததை இனிமேல் எப்படிச் செய்ய முடியும்? பிரதமர் மோடி நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கப் போவதில்லை. தனது சீடர்களில் ஒருவரைத்தான் பிஹாரின் முதல்வர் ஆக்குவார்” என்றார்.

Summary

Congress chief Mallikarjun Kharge addresses a public meeting at Rajapakar said, "PM Modi is not going to make Nitish Kumar Chief Minister, he will bring one of his disciples and make him sit on the chair"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in