மலையாள இலக்கிய ஆளுமை எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

மலையாள இலக்கிய ஆளுமை எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றிருக்கிறார் வாசுதேவன் நாயர்.
Published on

பிரபல மலையாள எழுத்தாளரும், திரைக் கதாசிரியரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.25) காலமானார்.

எம்.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் எம்.டி. வாசுதேவன் நாயர், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தில் 1933-ல் பிறந்தார். வேதியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், இலக்கியத்தின் மீது இருந்த ஆர்வத்தால், சிறுகதைகளை எழுதத் தொடங்கினார் வாசுதேவன் நாயர்.

சிறுகதைகளைத் தொடர்ந்து 23 வயதில் அவர் எழுதிய நாலுகெட்டு நாவலுக்கு 1959-ல் கேரள சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மஞ்சு, காலம், அசுரவித்து, ரண்டமூழம் உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதினார் எம்.டி. மலையாள குடும்ப அமைப்பைப் பின்னணியாக வைத்துத் தன் எழுத்து மூலம் மனித உணர்வுகளை இயல்பாக வாசகர்களுக்கு அவர் கடத்தினார்.

பிரபல மலையாள இதழான மாத்ருபூமியின் உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்த எம்.டி., பின்னாளில் அதன் ஆசிரியராக உயர்ந்து, பல ஆண்டுகள் பணியாற்றினார். புகழ்பெற்ற பல சிறுகதை தொகுப்புகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது காலம் நாவலுக்காக 1969-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

மேலும், தன் திரைக்கதைகள் மூலம் மலையாள திரைக்கதை எழுதும் பாணியில் புரட்சியை ஏற்படுத்தினார் எம்.டி. ஏறத்தாழ 54 படங்களுக்கு அவர் திரைக்கதைகளை எழுதியுள்ளார். சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதை 4 முறை அவர் வென்றிருக்கிறார்.

7 படங்களை எம்.டி. இயக்கியுள்ளார். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான நிர்மால்யத்திற்கு 1974-ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், மலையாள திரைத்துறையில் அதிக தேசிய விருதுகளை வென்ற நபர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் எம்.டி.

மலையாள இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 1995-ல் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2005-ல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

91 வயதான வாசுதேசன் நாயருக்குக் இரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.25) அவர் காலமானார்.

logo
Kizhakku News
kizhakkunews.in