கேரளத்தில், பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரை விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் கடந்த 2017-ல் பிரபல நடிகை கடத்தப்பட்டு, ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து நடிகை காவல்துறையில் புகாரளித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பல்சர் சுனில் என்பவர் தானாக முன்வந்து காவல்துறையில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பிருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் 2017 ஜூலை 10 அன்று திலீப் கைது செய்யப்பட்டார். முன்பகை காரணமாக திலீப் இதைச் செய்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனால் 85 நாள்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் ஜமினில் வெளியே வந்தார்.
இது தொடர்பான வழக்கை எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இதுவரை 1600 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் இருவரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய எர்ணாகுள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர். மேலும் நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளரான பல்சர் சுனில் உட்பட 6 பேரைக் குற்றவாளிகள் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்றுள்ள திலீப் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “நீதி நிலைநாட்டப்பட்டது” என்று பதிவிடுள்ளார்.
In Kerala, the Ernakulam Criminal Court has acquitted actor Dileep and his friend Sarath due to lack of sufficient evidence in the sexual assault case of a famous actress.