மஹாராஷ்டிரத்தில் 10-ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 35 மதிப்பெண்களுக்குப் பதில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்ற வகையில் புதிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
மஹாராஷ்டிரத்தில் புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநில பள்ளிக்கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் 100-க்கு 35 மதிப்பெண்களுக்குப் பதில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 35-க்கு குறைவாக 20 அல்லது இதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களில் பிரத்யேகமாக ஒரு குறிப்பு இடம்பெற்றிருக்கும். அந்தக் குறிப்பில் சம்பந்தப்பட்ட மாணவரால் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இடம்பெற்றுள்ள படிப்பைத் தேர்வு செய்ய முடியாது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதாவது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இவ்விரு பாடங்களிலும் 35-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால், இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவே கருதப்படுவார்கள். இருந்தபோதிலும், மேற்கொண்டு படிப்பை மேற்கொள்ளும்போது கணிதம், அறிவியல் பாடங்கள் இடம்பெறும் படிப்பை இவர்களால் தேர்வு செய்து படிக்க முடியாது.
அதேவேளையில் 35-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படும். கணிதம், அறிவியல் பாடங்கள் இடம்பெறும் படிப்பைத் தேர்வு செய்ய முடியாது என்ற குறிப்புடன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது மறுதேர்வு எழுதி இவ்விரு பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த முடிவின் மூலம் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கலாம் எனக் கருதப்படுகிறது. கணிதம், அறிவியல் பாடங்களில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் வேறொரு பிரிவில் திறமை கொண்டவர்களாக இருக்கலாம், இதுபோன்ற மாணவர்கள் வெற்றி பெற கணிதம், அறிவியல் பாடங்கள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய பாடத்திட்டம் மாநிலம் முழுக்க நடைமுறைக்கு வரும்போது, இந்த அமல்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.