மஹாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இரு கட்டங்களாகவும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (அக்.15) அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் தேதிகளை அறிவிக்கும் நோக்கில் தில்லி விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சகிதமாக செய்தியாளர்களைச் சந்தித்தார், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
இதில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ல் வாக்குப்பதிவும், நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவும், நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவைப்படும் சூழலில், கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியது. மேலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால் முதல்வர் பதவி குறித்து எழுந்த வேறுபாடால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன் மஹாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்று சுமார் 2.5 வருடங்கள் அப்பதவியில் இருந்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை உடைத்து, பாஜக ஆதரவுடன் மஹாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் இணைந்து மஹாயுதி கூட்டணி என்ற பெயரிலும், பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் மஹாவிகாஸ் அகாடி என்ற பெயரிலும் கூட்டாகவும் இந்தத் தேர்தலை சந்திக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க 42 இடங்கள் தேவைப்படும் சூழலில், கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.