
குஜராத் மாநிலத்தில் வாபி மற்றும் சபர்மதி இடையேயான புல்லட் ரயில் பாதையின் பணிகள் டிசம்பர் 2027-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சபர்மதி வரையிலான திட்டப் பணிகள் டிசம்பர் 2029-க்குள் நிறைவடையும் என்றும் புல்லட் ரயில் திட்டம் குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 23) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகவும் முன்னோடியான ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களான முகேஷ்குமார் சந்திரகாந்த் தலால், தேவுசின் சௌஹான் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.
அது தொடர்பான தகவல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மும்பை-அஹமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டம் (508 கி.மீ.), ஜப்பானின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்
குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்கள் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் வழியாகப் பயணிக்கும் புல்லட் ரயிலுக்காக மும்பை, தானே, விரார், போய்சர், வாபி, பில்லிமோரா, சூரத், பரூச், வதோதரா, ஆனந்த், அஹமதாபாத் மற்றும் சபர்மதி ஆகிய இடங்களில் 12 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகை தோராயமாக ரூ.1,08,000 கோடி என்றும், இதில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) 81%, அதாவது ரூ. 88,000 கோடி கடனாக வழங்குகிறது என்றும், மீதமுள்ள 19%, அதாவது ரூ. 20,000 கோடியை மத்திய ரயில்வே அமைச்சகம் (50%), மகாராஷ்டிர (25%) மற்றும் குஜராத் (25%) மாநில அரசுகள் தங்களின் பங்களிப்பாக வழங்கும் என்றும், அமைச்சர் கூறினார்.
மேலும், (இந்த திட்டத்திற்காக) மஹாராஷ்டிரத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் 2021 வரை திட்டத்தை பாதித்ததாகவும், ஆனால் தற்போது திட்டத்திற்கான முழு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தகவலளித்தார்.