
மஹாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் முடிவைத் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தப்படும் முடிவைத் திரும்பப் பெறுவது பற்றி அறிவித்தார்.
"ஒன்றாம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் மற்றும் ஜூனில் பிறப்பித்த முடிவுகளைத் திரும்பப் பெற மஹாராஷ்டிர அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரைக்க நரேந்திர ஜாதவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெறும் மற்றவர்களின் பெயர்கள் வரும் நாள்களில் அறிவிக்கப்படும். இந்தக் குழு மஷேல்கர் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து எந்த வகுப்பிலிருந்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தலாம் என்பதைப் பரிந்துரைக்கும். மராத்தி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார் ஃபட்னவீஸ்.
மஹாராஷ்டிரத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 16-ல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, மூன்றாவது மொழியாக ஹிந்தியை விருப்ப மொழியாகத் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் செய்து ஜூன் 17 அன்று புதிய அறிவிப்பை வெளியிட்டது.
மஹாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனை, மஹாராஷ்டிர நவநிர்மான் சேனை, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.