
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட பிக்பாஸ் பிரபலம் அஜாஸ் கான் நோட்டாவுக்கும் குறைவாக வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளன.
இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்த ஒரு வேட்பாளர் அஜாஸ் கான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம். இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவரை 56 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
மஹாராஷ்டிர தேர்தலில் சந்திரசேகர ஆஸாத்தின் ஆஸாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் 56 லட்சம் பேரைக் கொண்டிருந்தாலும், தேர்தல் களத்தில் எதுவும் எடுபடவில்லை. வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நோட்டாவுக்குக் கூட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் (1,298) கிடைத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலின்போது, அஜாஸ் கான் மும்பை வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அப்போதும் வெறும் 1,041 வாக்குகளை மட்டுமே அஜாஸ் கான் பெற்றார்.