
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா பிப்ரவரி 24-ல் நேரில் ஆஜராகுமாறு மஹாராஷ்டிர சைபர் பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பெற்றோர் குறித்து பேசியது சர்ச்சையானது. இவருடையப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ரன்வீர் அல்லாபாடியா, சமய் ரைனா உள்ளிட்டோருக்கு மகளிர் ஆணையம் அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும், ஆணையத்தின் அழைப்பாணைக்கு இணங்க நிறைய பேர் நேரில் ஆஜராகவில்லை. நடைமுறை சிக்கல்கள், ஏற்கெனவே இருந்த பயணத் திட்டம், தனிப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆஜராக முடியவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரன்வீர் கேட்டுக்கொண்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, விசாரணை மார்ச் 6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரீத் சிங் பாரிஸ் சென்றுள்ளதால், அவருடையக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா திரும்பியவுடன் மார்ச் 11-ல் ஆஜராகுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. துஷார் பூஜாரி மற்றும் சௌரவ் போத்ரா நேரில் ஆஜராகவில்லை. இதற்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மஹாராஷ்டிர சைபர் பிரிவு, ரன்வீர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிப்ரவரி 24 அன்று நேரில் ஆஜராகுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.