
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் ஆரத்தி சாத்தே நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக அவர் பணியாற்றி வந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
அஜித் பகவந்த்ராவ் கடேஹங்கர், ஆரத்தி அருண் சாத்தே மற்றும் சுஷில் மனோகர் கோடேஸ்வர் ஆகியோரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவுக்கு கடந்த ஜூலை 28, 2025 அன்று நடைபெற்ற இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆரத்தி சாத்தே நியமிக்கப்பட்டது மஹாராஷ்டிர அரசியல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்திய நீதி அமைப்பில் நியாயத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் பராமரிக்கும் வகையில் அவரை நீதிபதி பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளராக ஆரத்தி சாத்தேவை நியமிப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிரா பாஜகவால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் நகலை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் எம்.எல்.ஏ.வும் பொதுச்செயலாளருமான ரோஹித் பவார் வெளியிட்டார்.
மேலும், பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஆர்த்தி சாத்தே வெளியிட்ட சமூக ஊடகப் பதிவையும் ரோஹித் பவார் பகிர்ந்துள்ளார்.
பொதுவெளியில் இருந்துகொண்டு ஆளுங்கட்சிக்காக வாதிடும் ஒருவரை நீதிபதியாக நியமிப்பது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய அடி என்று ரோஹித் பவார் கூறினார். இதுபோன்ற நியமனங்கள், இந்திய நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மஹாராஷ்டிர மாநில பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் நவ்நாத் பாங், `ஆரத்தி சாத்தே மகாராஷ்டிர பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பது உண்மைதான், ஆனால் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பே அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்’ என்றார்.