மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மஹா விகாஸ் அகாதி கூட்டணியில் 25-30 தொகுதிகளில் பிரச்னை இருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரத்துக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாஜக கடந்த 20 அன்று 99 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு), சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு) இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் இதுபற்றி கூறியதாவது:
"மஹா விகாஸ் அகாதியைக் காட்டிலும் மெகா கூட்டணியில் (பாஜக கூட்டணி) நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. எங்களுடையக் கட்சித் தொண்டர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால், தொகுதிப் பங்கீடு இறுதியாக நேரம் எடுக்கும். எங்களுடையப் பிரச்னையில் ஓரிரு நாள்களில் தீர்வு காணப்படும். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவுடன் பாலாசாஹெப் தோரத் சந்திப்பு நடத்தியுள்ளார். தற்போது தோரத்துடன் நான் ஆலோசனை நடத்தவுள்ளேன். இதன்பிறகு, மஹா விகாஸ் தொகுதிப் பங்கீடு குறித்த சந்திப்பு நடைபெறும். 25-30 தொகுதிகளில் பிரச்னை இருக்கிறது. இது விரைவில் தீர்க்கப்படும்" என்றார்.
பாலாசாஹேப் தோரத் கூறியதாவது:
"தொகுதிப் பங்கீட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பிரச்னை உள்ளதாகக் கருதப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பெரிதளவில் உள்ளது. இன்னும் நேரம் உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும்" என்றார்.
கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 122 தொகுதிகளிலும் சிவசேனை 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.