
பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவை முன்னிட்டு ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மஹா கும்பமேளா நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள் புனித நீராட பிரயாக்ராஜுக்குப் படையெடுத்து வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், பிரயாக்ராஜில் மிகப் பெரிய அளவில் வணிகம் நடைபெற்று வருகிறது.
மஹா கும்பமேளா தொடங்குவதற்கு முன்பு, 40 கோடி பேர் வருகை தருவார்கள் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. ரூ. 2 லட்சம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், பிப்ரவரி 26 முடிவில் ஏறத்தாழ 60 கோடி பேர் மஹா கும்பமேளாவுக்கு வருகை தந்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரயாக்ராஜில் நிகழும் வர்த்தகம் ரூ. 3 லட்சம் கோடி என்ற அளவில் இருக்கும் என அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் தில்லி எம்.பி.யுமான பிரவீன் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கு இது பெரும் ஊக்கம் தந்துள்ளது. நிறைய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு தொழில்கள் மிகப் பெரிய அளவில் பொருளாதார நடவடிக்கைகளைச் சந்தித்துள்ளன. உணவுத் துறை, சிசிடிவி கேமிராக்கள், ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்கள், விளம்பரப் பிரிவுகள், சுகாதாரம் சார்ந்த சேவைகள், கைவினைப் பொருள்கள், ஜவுளித் துறை உள்ளிட்டவை இதில் அடக்கம். மேலும், பிரயாக்ராஜ் மட்டும் இதில் பலனடையவில்லை. பிரயாக்ராஜைச் சுற்றி 150 கி.மீ. சுற்றளவில் உள்ள நகரங்களும் வணிகம் மூலம் பலன் பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளிலும் பெரிய அளவில் பொருளாதாரச் செயல்பாடுகளை இது ஊக்குவித்துள்ளது. நாட்டின் வணிகம், வர்த்தகம், கலாசாரத்தில் புதிய பொருளாதார மைல்கல்லாக மஹா கும்பமேளா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.