
உத்தரப் பிரதேசம் மஹா கும்பமேளா கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு மோசமான நிர்வாகமே காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா கும்பமேளா ஜனவரி 13 அன்று தொடங்கியது. மௌனி அமாவாசையான இன்று புனித நீராடும் வகையில், பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.
இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளார்கள்.
திரிவேணி சங்கமம் நோக்கி பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் அருகிலுள்ள படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடலாம் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோசமான நிர்வாகமே இதற்குக் காரணம் என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பலர் உயிரிழந்தது மற்றும் நிறைய பேர் காயமடைந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
சாதாரண பக்தர்கள் குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதில், விஐபி வருகை மீது கவனம் செலுத்தியதும் மோசமான நிர்வாகமும் இந்தத் துயரமான சம்பவத்துக்குக் காரணம். மஹா கும்பமேளாவுக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. இன்னும் நிறைய புனித நீராடல் நடைபெறவுள்ளது.
இன்று நிகழ்ந்ததைப்போன்ற துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதைத் தடுக்க, அரசு தங்களுடைய அமைப்பை மேம்படுத்த வேண்டும். விஐபி கலாசாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சாதாரண பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், நிர்வாகத் திறமையின்மையை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்தும், இதுமாதிரியான அரைகுறை ஏற்பாடுகளைச் செய்தது கண்டனத்துக்குரியது என்றார்.