
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மஹா கும்பமேளா நிகழ்வு இன்றுடன் (பிப்.26) நிறைவு பெறுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மஹா கும்பமேளா நிகழ்வு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி விமர்சையாகத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்நிகழ்வில், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதியில் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமாக பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இதன்படி, இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மஹா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக உ.பி. மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மஹா சிவராத்திரி நாளான இன்று (பிப்.26) கும்பமேளா நிறைவு பெறுகிறது.
மஹா சிவராத்திரி என்பதாலும், கும்பமேளா நிகழ்வின் கடைசி தினம் என்பதாலும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இன்று பிரயாக்ராஜிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டி, பிரயாக்ராஜ் நகரில் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஹா கும்பமேளா நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 140 சமூக ஊடகவியலாளர்கள் மீது உ.பி. மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.