நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டம்: நேரில் ஆஜராகாத செபி தலைவர் மாதவி புச்!

கூட்டத்தில் பங்கேற்க செபி தலைவருக்கு விலக்கு அளிக்குமாறு முதலில் கோரப்பட்டது, ஆனால் அதை நாங்கள் நிராகத்தோம். பிறகு கூட்டத்தில் பங்கேற்பதை அவர் உறுதி செய்தார்.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கூட்டம்: நேரில் ஆஜராகாத செபி தலைவர் மாதவி புச்!
1 min read

இந்திய நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் கூட்டத்துக்கு செபி தலைவர் மாதவி புச் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் இன்று (அக்.24) நடைபெற்ற நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் கூட்டத்தில் செபி தலைவர் மாதபி புச் திட்டமிட்டபடி ஆஜராகாத நிலையில், அது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பொது கணக்குக் குழுத்தலைவருமான கே.சி. வேணுகோபால். அவர் பேசியவை பின்வருமாறு:

`பொது கணக்குக் குழுவின் முதல் கூட்டத்திலேயே இந்திய ஒழுங்குமுறை அமைப்புகளை மதிப்பாய்வு மேற்கொள்ள சுயமாக முடிவு செய்தோம். அதன்படி இன்று (அக்.24) காலை செபி அமைப்பை மதிப்பாய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க செபி தலைவருக்கு விலக்கு அளிக்குமாறு முதலில் கோரப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கையை நாங்கள் நிராகத்தோம். அதன் பிறகு அவரது குழுவுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை செபி தலைவர் உறுதி செய்தார். இன்று காலை தில்லிக்குப் பயணிக்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். ஒரு பெண் கோரிக்கை விடுப்பதால் அதை ஏற்று இன்றைய கூட்டத்தை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்க முடிவு செய்தோம்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியவை பின்வருமாறு,

`பொதுவாகவே நாடாளுமன்ற குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் விவாதிப்பது கிடையாது. இது தொடர்பாக பொது கணக்குக் குழுத்தலைவர் கே.சி. வேணுகோபால் பொதுவெளியில் பேசியது எங்களை காயப்படுத்தியுள்ளது. பொது கணக்குக்குழுவில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து எங்களுக்கு ஆட்சேபம் உள்ளது.

உடனடியாக எழுந்து அவர் (வேணுகோபால்) வெளியேறியது விசித்திரமாக இருந்தது. தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகளை விவாதிப்பதே பொது கணக்குக்குழுவின் வேலை, ஆனால் எந்த அடிப்படையில் அவர் சுயமாக முடிவு செய்து இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தார்?

செபி குறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எங்களைப் பேசவிடாமல் பொது கணக்குக் குழுத்தலைவர் வெளியேறியதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளிக்கவுள்ளோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in