மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2-ல் தொடங்கியது. இந்த மாநாட்டில் 85 உறுப்பினர்கள் கொண்ட மத்தியக் குழு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. இதில் 20 சதவீதம் பேர் பெண் உறுப்பினர்கள்.
புதிய மத்தியக் குழு உறுப்பினர்களால் 18 பேர் கொண்ட பொலீட்பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேர் புதியவர்கள். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கே. பாலகிருஷ்ணன் பொலீட்பீரோவின் புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி மறைவைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச்செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த எம்.ஏ. பேபி?
1954-ல் பிறந்த எம்.ஏ. பேபி, தனது பள்ளிப் பருவத்தில் கேரள மாணவர் அமைப்பில் இணைந்து அரசியலுக்கான விதையைத் தூவினார். இவர் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்துள்ளார். பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆனார்.
எம்.ஏ. பேபி 1986 மற்றும் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 2006 முதல் 2016 வரை கொல்லத்தில் குண்டர சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை கேரள அரசில் பொதுக்கல்வி மற்றும் கலாசார அமைச்சராக இருந்துள்ளார்.
2012 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார். 2014-ல் கொல்லம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.