பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம்?

தேர்தல் அறிக்கை குழு இரண்டாவது முறையாக ஏப்ரல் 4-ல் கூடவுள்ளதாகத் தகவல்.
பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம்?

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக பாஜக அமைத்துள்ள குழுவானது ஏப்ரல் 4-ல் இரண்டாவது முறையாகக் கூடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை குழுவை பாஜக அமைத்துள்ளது. இதில் 4 மாநில முதல்வர்கள், 11 அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்கள்.

சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்பட ஒவ்வொரு சிறுபான்மையின வகுப்பிலிருந்தும் ஒரு பாஜக தலைவர் இந்தக் குழுவில் பிரதிநிதியாக இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தக் குழு ராஜ்நாத் சிங் தலைமையில் முதல்முறையாக திங்கள்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களிடமிருந்து கேட்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்தக் குழு இரண்டாவது முறையாக ஏப்ரல் 4-ல் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு மோடியின் உத்தரவாதம் என்று தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு சாதகமாக நிறைய வாக்குறுதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி அதிகரிக்கப்படலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in