கன்னட மொழி பற்றி பேசியது கர்நாடகத்தில் சர்ச்சையான நிலையில், அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தமிழ் மொழியிலிருந்து கன்னடம் பிறந்ததாக கமல் ஹாசன் பேசியிருந்தார். இது கன்னட மொழியையும் கன்னட மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கர்நாடகத்தில் விமர்சனங்கள் எழுந்தன. கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா உள்ளிட்டோர் கமல் ஹாசனுக்கு கண்டனங்களைத் தெரிவித்தார்கள். மேலும், கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் கர்நாடகத்தில் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், தக் லைஃப் பட விழா தொடர்பாக கமல் ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் கேரளம் சென்றுள்ளார்கள். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கமல் ஹாசனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கமல் ஹாசன் அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என பதிலளித்து நீண்ட விளக்கத்தையும் கொடுத்தார்.
"அவர்கள் பிரச்னையைக் குழப்பிக் கொள்கிறார்கள். நான் கூறியவை அன்பின் வெளிப்பாடு. நிறைய வரலாற்று ஆய்வாளர்கள் எனக்கு மொழிகளின் வரலாறு குறித்து கற்றுக்கொடுத்துள்ளார்கள். நான் எதையும் குறிப்பிட்டு கூறவில்லை.
தமிழ்நாட்டைப் போல வேறு மாநிலம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாடு ஓர் அரிய மாநிலம். காரணம், தமிழ்நாட்டில் ஒரு மேனன் முதல்வராக இருந்துள்ளார், ஒரு ரெட்டி முதல்வராக இருந்துள்ளார், தமிழர் முதல்வராக இருந்துள்ளார், கர்நாடகத்தின் மாண்டியாவைச் சேர்ந்த ஐயங்கார் ஒருவர் முதல்வராக இருந்துள்ளார்.
கர்நாடகத்திலிருந்து வந்த ஒரு முதல்வரால் சென்னையில் பிரச்னை எழுந்தபோது, கர்நாடகம் தான் எனக்கு ஆதரவு கொடுத்தது. எங்கும் செல்ல வேண்டாம், நாங்கள் உங்களுக்கு வீடு கொடுக்கிறோம் என கன்னட மக்கள் கூறினார்கள்.
எனவே, தக் லைஃப், கமல் ஹாசன் மற்றும் இதுதொடர்புடைய சர்ச்சைகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்குத் தகுதி கிடையாது. அதுபற்றி பேசுவதற்கான போதிய கல்வியறிவு அவர்களுக்குக் கிடையாது. இதில் நானும் அடக்கம். எனவே, இதுபோன்ற மிகவும் ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம்.
ஷிவ ராஜ்குமாருடன் அன்பின் வெளிப்பாடு தான் அந்த உரையாடல். அவருடைய தந்தை எனக்கு தந்தை மாதிரி, சகோதரர் மாதிரி. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மொழிகளும் அப்படி தான்.
வடஇந்தியப் பார்வையில் பார்த்தால், அவர்கள் சொல்வது சரி. தென் குமரிப் பார்வையிலிருந்து பார்த்தால், நான் சொல்வது தான் சரி. இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது அறிஞர்கள், மொழி வல்லுநர்களின் பார்வை. அவர்கள் இரு தரப்பும் சொல்வது சரி என்று சொல்லலாம்.
ஆனால், அவர்கள் தான் தங்களுடைய குடும்பத்துடன் இணைய வேண்டுமா அல்லது வடக்கிலிருந்து வந்த மொழிகளுடன் இணைய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். இது ஜனநாயக நாடு. இது பதில் கிடையாது, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றார் கமல் ஹாசன்.