

அமெரிக்காவிடம் பிரதமர் இந்தியாவை விற்றுவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
“இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முழுமையான சரணடைதலைக் காட்டுகிறது. பிரதமர் மோடி தன்னை மட்டுமின்றி 150 கோடி மக்களின் எதிர்காலத்தையும் ஒப்படைத்துவிட்டார். பாஜகவின் நிதி கட்டமைப்பைப் பாதுக்காக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் நெருக்கடி
நெருக்கடி இல்லாமல் எந்தவொரு பிரதமரும் இப்படி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்க மாட்டார்கள். நம்மை வரிகளால் கட்டுப்படுத்தினார்கள். நமது தரவுகளையும், மின்னணு வர்த்தகக் கட்டுப்பாட்டுகளையும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். நம் நாட்டு விவசாயிகளின் எதிர்காலம் இயந்திரமயம் ஆக்கப்பட்ட அமெரிக்க பண்ணைகளின் வசம் விடப்பட்டுள்ளது. நமது ஜவுளித்துறை அழிக்கப்பட்டுள்ளது. நமது எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நமக்கு யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டுமோ, அவரிடமிருந்து எண்ணெய் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எந்தப் பிரதமரும் இப்படி ஒன்றைச் செய்வார் என்று என்னால் நம்பமுடியவில்லை.
அம்பானி ஏன் சிறையில் இல்லை?
அனில் அம்பானி என்று தொழிலதிபர் ஒருவர் உள்ளார். அவர் ஏன் சிறையில் அடைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறேன். அவரது பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறது. அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் சிங் புரியிடமும் கேட்க விரும்புகிறேன். நமது பாதுகாப்புத் துறைகான பட்ஜெட்டில் அதானியின் அழுத்தமும் தெரிகிறது.
இந்தியாவை விற்றுவிட்டீர்கள்
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் சொல்கிறேன். அதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நமது பாரதத் தாயை நீங்கள் விற்றுவிட்டீர்கள். பிரதமர் தனது கழுத்து நெரிக்கப்பட்டதும் இந்தியாவை விற்றுவிட்டார். பிரதமர் கண்களில் இறுக்கப்பட்டதன் பயம் தெரிகிறது.
டிரம்புக்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய தரவுகளைக் கையாள வேண்டுமென்றால் அதற்கு இந்தியாவைச் சமமாக நடத்த வேண்டும். இந்தியாவை பணியாட்களைப் போல் நினைக்கக் கூடாது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு என்பது எங்களுக்கு முக்கியம். அதில் நாங்கள் கவனமாக உள்ளோம். அமெரிக்காவில் டிரம்பின் வாக்குவங்கி விவசாயிகள் என்பதால் அவர்களை அவர் பாதுகாக்க நினைக்கிறார். இந்தியாவிலும் நாங்கள் அதைத்தான் செய்ய விரும்புகிறோம். அமெரிக்காவா சீனாவா என்று நடக்கும் போட்டியில் இந்தியாவின் தரவுகள் மிக முக்கியமானவை. அமெரிக்கா பெரும் சக்தியாகத் திகழ வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் டாலரைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்திய தரவுகள் அவசியம்” என்றார்.
Opposition leader Rahul Gandhi has accused the Prime Minister of selling India to the United States in the recent Trade deal between India and US.