
மணிப்பூரில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆகஸ்ட் 13 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பற்கு ஒப்புதல் வழங்கும் சட்டப்பூர்வ தீர்மானத்திற்கு மக்களவை நேற்று (ஜூலை 30) ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மக்களவையின் ஒப்புதலைக் கோரும் தீர்மானத்தை உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்.பி. அன்டோ ஆண்டனி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த பிரச்னையை எழுப்பினார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த லால்ஜி வர்மா, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய பின்னர் மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்த நித்யானந்த் ராய், `மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது அவசியம்’ என்ற கருத்தை வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஒரே ஒரு வன்முறை சம்பவம் மட்டுமே நடந்து அதில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டது என்றும், கடந்த நான்கு மாதங்களில் அம்மாநிலத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மணிப்பூரின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு தசாப்தத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பிரதமர் 78 முறைக்கும் மேல் பயணம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வன்முறை சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதை அவர் அடிக்கோடிட்டார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை மணிப்பூரில் நீட்டிப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது. இதே தீர்மானம் மாநிலங்களவையிலும் நிறைவேறும் பட்சத்தில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்படும்.