
செபி தலைவர் மாதவி புச் மற்றும் அவர் மீது ஊழல் புகார் கூறிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைந்துள்ளது லோக்பால் அமைப்பு.
மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இருவர், செபி தலைவர் மாதவி புச் மீது லோக்பால் அமைப்பில் ஊழல் புகார் அளித்துள்ளனர். அரசுப் பதவியை உபயோகித்துத் தனிப்பட்ட வகையில் மாதவி புச் ஆதாயம் பெற்றதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக மாதவி புச்சிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றின் மீது பதிலளிக்கும் வகையில் அவருக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கியது லோக்பால். இதைத் தொடர்ந்து கடந்த டிச.7-ல் லோக்பால் அமைப்பிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் மாதவி புச்.
அதில், தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்குப் பதிலளித்திருந்த மாதவி புச், இந்த விசாரணை தொடர்பாக சில ஆட்சேபங்களையும் எழுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக மாதவி புச்சையும், புகாரளித்த எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரையும் நேரில் அழைத்து அவர்களின் விளக்கங்களைக் கேட்க, கடந்த டிச.19 முடிவு செய்தது லோக்பால்.
இதன் பிறகு, வரும் ஜன.28-ல் நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளிக்க புகார்தாரர்களுக்கும், மாதவி புச்சுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது லோக்பால்.