மக்களவை கூட்டத்தொடரில் 103 சதவீத செயல்திறன்: சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவை கூட்டத்தொடரில் 103 சதவீத செயல்திறன்: சபாநாயகர் ஓம் பிர்லா

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 18 மணி நேரம் நடைபெற்றது. இதில் மொத்தம் 68 எம்.பி.க்கள் கலந்து கொண்டு பேசினார்கள்
Published on

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ல் தொடங்கி நேற்றைய (ஜூலை 2) தினம் முடிவு பெற்றது. இந்த முதல் கூட்டத்தொடரின் செயல் திறன் 103 சதவீதமாக இருந்தது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

முதல் கூட்டத் தொடரில் 7 நாட்கள் கூடிய மக்களவை, 34 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்கள் பொதுத் தேர்தலில் தேர்வான மக்களவை எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகராக எம்.பி.க்களால் தேர்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா.

ஜூன் 26-ல் புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. அதன் பிறகு ஜூன் 27-ல் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 18 மணி நேரம் நடைபெற்றது. இதில் மொத்தம் 68 எம்.பி.க்கள் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் மக்களவை விதி எண் 377-ன் கீழ் மொத்தம் 41 விஷயங்கள் எழுப்பப்பட்டன.

18-வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய மோடி, தன் பேச்சில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in