
இன்று (ஆக. 2) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாட்டில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
`மக்களவைத் தேர்தலில் மோசடி நடைபெறலாம், 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடைபெற்றது’, என்று பேசிய ராகுல் காந்தி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியிடம் தற்போது தரவுகளும், ஆவணங்களும் உள்ளன என்றார்.
ஒரு மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது, 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள் என்பதைக் கண்டறிந்ததாக காந்தி தெரிவித்தார். `ஒரு மக்களவைத் தொகுதியில், நாங்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தோம். 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள் என்பதைக் கண்டறிந்தோம்,’ என்று அவர் கூறினார்.
மேலும், `அவர்கள் 15-20 இடங்களைக் குறைவாகப் பெற்றிருந்தால், அவர் (நரேந்திர மோடி) பிரதமராகியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஆளும் மத்திய பாஜகவிற்கான பெரும்பான்மை இந்த மோசடியைச் சார்ந்தது என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த காந்தி, `இந்தியாவில் தேர்தல் ஆணையம் இறந்துவிட்டது’ என்றார்.
தனது சந்தேகங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து விவரித்து மாநாட்டில் ராகுல் காந்தி கூறியதாவது, `தேர்தல் அமைப்பு குறித்து நான் அண்மைக் காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதல் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் மீது ஏற்கனவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அமோக வெற்றிகளைப் பெறும் திறன் மீதும் இருந்தது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் பேசும் போதெல்லாம், ஆதாரம் எங்கே என்று அவர்கள் கேட்டார்கள்’ என்றார்.
மேலும், `பின்னர், மகாராஷ்டிரத்தில் ஏதோ நடந்தது. மக்களவையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். பின்னர் 4 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் தோற்றது மட்டுமல்லாமல், துடைத்தெறியப்பட்டோம்.
முறைகேடுகள் குறித்து நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். மகாராஷ்டிரத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் இணைந்திருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் சென்றன. இப்போது நான் எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது’ என்றார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், `தினமும் முன்வைக்கப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது.
மேலும், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணிபுரியும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று ஆணையம் கேட்டுக்கொள்கிறது’ என்று கூறியது.