உ.பி.: கன்னௌஜில் அகிலேஷ் யாதவ் வேட்புமனு

அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கும் அகிலேஷ் யாதவ் பதிலளித்தார்.
உ.பி.: கன்னௌஜில் அகிலேஷ் யாதவ் வேட்புமனு

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச மாநிலம் கன்னௌஜில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜவாதி 63 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கன்னௌஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவின் உறவினர் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக நேற்று தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கன்னௌஜில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகிலேஷ் யாதவ் இன்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் உடனிருந்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

"சமாஜவாதி சார்பாக கன்னௌஜில் நான் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் விரும்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்பு கன்னௌஜில் போட்டியிட்டுள்ளேன். கன்னௌஜ் மக்கள் வளர்ச்சியைப் பார்த்திருக்கிறார்கள்.

சமாஜவாதியால் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதால், பாஜக அரசு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. அவர்கள் எதிர்மறை அரசியலை செய்கிறார்கள்" என்றார் அவர்.

அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கு, "அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in