பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

இதிலும் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
ANI

மக்களவைத் தேர்தலுக்கான 72 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, பாஜகவின் மத்திய தேர்தல் குழு கடந்த திங்கள்கிழமை கூடியது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மூன்று முன்னாள் முதல்வர்கள், நான்கு மத்திய அமைச்சர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஹரியானா முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்த மனோஹர் லால் கட்டர் அந்த மாநிலத்தின் கர்னால் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திரிபுரா முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஹரித்வாரில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அனுராக் தாக்குர், பியூஷ் கோயல், பிரல்ஹாத் ஜோஷி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

அனுராக் தாக்குர் மத்தியப் பிரதேச மாநிலம் ஹமிர்புர் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரல்ஹாத் ஜோஷி கர்நாடக மாநிலம் தார்வாத் தொகுதியில் போட்டியிடுகிறார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நிதின் கட்கரியும், மும்பை வடக்கில் பியூஷ் கோயலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் தில்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தெலங்கானா, திரிபுரா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதிலும் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in