மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 93 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.
கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 14.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 6.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 14.22 சதவீத வாக்குகளும், அசாமில் 10.12 சதவீத வாக்குகளும், பிஹாரில் 10.03 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 13.24 சதவீத வாக்குகளும், கோவாவில் 12.35 சதவீத வாக்குகளும், குஜராத்தில் 9.87 சதவீத வாக்குகளும், கர்நாடகத்தில் 9.45 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 12.13 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மூன்றாம் கட்டத் தேர்தலில் 1,300 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் சுமார் 120 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக உள்ளார்கள். 1.85 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 17.24 கோடி தகுதி வாய்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள்.
இந்தத் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் ஷிவராஜ் சிங் சௌஹான், திக்விஜய் சிங், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, சமாஜவாதி தலைவர் டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.