
1961 வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வருமான வரி மசோதா (நெ. 2) எந்த ஒரு விவாதமும் இல்லாமல் மக்களவையில் (ஆக. 11) இன்று நிறைவேறியுள்ளது.
மூன்றாவது முறையாக கடந்தாண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 1961 வருமான வரிச் சட்டத்தை எளிதாக்கும் வகையில், உரிய காலக்கெடுவுக்குள் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 13 அன்று புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதன்பிறகு, பாஜக எம்.பி. பைஜெயந்த் பாண்டா தலைமையிலான மக்களவைத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா பரிந்துரைக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு ஜூலை 21 அன்று மசோதா தொடர்பான 285 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேர்வுக் குழு சமர்ப்பித்தது.
இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் இன்று (ஆக. 11) மக்களவையில் கூறினார்.
இதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2025 வருமான வரி மசோதா திரும்பப்பெறப்பட்டு, 2025 வருமான வரி மசோதா (நெ. 2) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்வுக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றன.
பல தசாப்தங்களாக நிலவும் பழமையான வரி கட்டமைப்பை இந்த புதிய மசோதா எளிதாக்குகிறது என்றும், வரிமான வரி செலுத்துவோர் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்க இது வழிவகை செய்கிறது என்றும் பைஜெயந்த் பாண்டா கூறினார்.
மேலும், `1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 4,000-க்கும் மேற்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளது. அது மிகவும் சிக்கலானதாகிவிட்டது. புதிய மசோதா அதை கிட்டத்தட்ட 50% எளிதாக்குகிறது...’ என்றார்.
2024 மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு மற்றும் பிஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.