ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை.
ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் ஆணையர்
ANI

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் தேதிகளை வெளியிட தில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் துணை ஆணையர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இந்த அறிவிப்பின்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 19 (102 மக்களவைத் தொகுதிகள்)

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 26 (89 மக்களவைத் தொகுதிகள்)

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: மே 7 (94 மக்களவைத் தொகுதிகள்)

நான்காம் கட்ட வாக்குப்பதிவு: மே 13 (96 மக்களவைத் தொகுதிகள்)

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: மே 20 (49 மக்களவைத் தொகுதிகள்)

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: மே 26 (57 மக்களவைத் தொகுதிகள்)

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு: ஜூன் 1 (57 மக்களவைத் தொகுதிகள்)

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தில்லி, கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, கேரளம், லட்சத்தீவுகள், லடாக், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய 22 மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகம், ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மஹாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்ததாவது:

"எங்களுடைய அணி முழுமையடைந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவுக்கு நாங்கள் முழுமையாகத் தயாராகியுள்ளோம்.

17-வது மக்களவையின் ஆட்சிக் காலம் ஜூன் 16-ல் நிறைவடைகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுடைய ஆட்சிக் காலமும் ஜூனில் நிறைவடைகிறது. ஜம்மு-காஷ்மீருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி. பெண் வாக்காளர்கள் 47.1 கோடி. 1.82 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளவர்கள். 20 முதல் 29 வயதில் 19.47 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள்.

12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளார்கள்.

85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான வசதிகளை செய்துத் தரத் தயாராக உள்ளோம்.

தேர்தல் நேரத்தில் எங்கு வன்முறை நிகழ்ந்தாலும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கடந்த 11 சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது ரூ. 3,400 கோடி பறிமுதல் செய்யப்பட்டன. இது 853% அதிகம். பண பலத்தைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தேர்தல் நேரங்களில் எல்லைகளில் ட்ரோன் மூலம் சோதனைகள் நடத்தப்படும்.

நாடு முழுவதும் தேர்தல் பார்வையாளர்களாக 2,100 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in