நீட் தேர்வு விவகாரம்: திங்கள்கிழமை வரை மக்களவை ஒத்திவைப்பு

நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மக்களவை ஒத்திவைப்பு.
நீட் தேர்வு விவகாரம்: திங்கள்கிழமை வரை மக்களவை ஒத்திவைப்பு
படம்:

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதே கோரிக்கையை முன்வைத்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

"நீட் விவகாரத்தை முக்கியமானப் பிரச்னையாகக் கருதுவதாக எதிர்க்கட்சி மற்றும் மத்திய அரசு சார்பில் நாட்டு மாணவர்களுக்கு நாம் கூட்டாக ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும். எனவே, மாணவர்களுக்கு மதிப்பளித்து, நீட் குறித்து இன்று தனி விவாதம் நடைபெற வேண்டும்" என்றார்.

ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் கூறுகையில், "நீட் விவகாரத்தில் நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. முதல் வினாத் தாள் கசிந்தது. அடுத்து முறைகேடுகள் நடந்துள்ளன. ஒருவரைக் கைது செய்வது போதுமானது அல்ல. தேசிய தேர்வு முகமை, மத்திய கல்வித் துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரும் இதற்குக் காரணம்" என்றார்.

ஆனால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

"நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 22 நோட்டீஸ் கிடைக்கப்பெற்றுள்ளன. நீட் முறைகேடுகள் குறித்து நேர்மையான விசாரணை நடைபெறும் என குடியரசுத் தலைவர் தனது உரையின் 20-வது பத்தியில் ஏற்கெனவே குறிப்பிட்டுப் பேசியுள்ளார்" என்று கூறி அவையை ஒத்திவைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தார்கள். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட, திங்கள்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in