
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.25) தொடங்கியதை அடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமலியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வரும் டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் ஏறத்தாழ 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்படுவதால் நாளை (நவ.26) மட்டும் நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை எனவும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும் என நம்புவதாகவும் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
இதைத் தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் காலை 11 மணிக்கு புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தொடங்கின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை தொடங்கியதும் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முதலில் உயிரிழந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதன் பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியை அடுத்து நண்பகல் 12 மணி மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதன்பிறகு 12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரம், துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தங்கர் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மாநிலங்களவை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 11.45 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார் ஜெக்தீப் தங்கர்.