உலகின் பூமத்திய ரேகைக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் வெகு அருகே அமைந்துள்ள காரணத்தால் இந்தியாவில் இடியுடன் கூடிய மழை பெய்வது வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாகும். இதே காரணத்தால் இந்தியாவில் அதிகளவில் மின்னல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மின்னல்களால் ஏற்படும் மனித இறப்புகளை குறைக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் லைட்னிங் ரெசிலியன்ட் இந்தியா காம்பெயின் என்கிற தனியார் தன்னார்வலர் அமைப்பு, சமீபகாலங்களில் மின்னல்கள் மற்றும் இடியுடன் கூடிய மழை நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
1967 தொடங்கி 2020 வரை, கடந்த 53 வருடங்களாக இந்தியாவில் மின்னலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த ஒரு ஆய்வுக்கட்டுரை நடப்பாண்டில் வெளியானது. இதன்படி இந்த 53 வருடங்களில் இந்தியாவில் மொத்தம் 1,01,309 உயிரிழப்புகளை மின்னல் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளன.
அதிலும் கடந்த 1967 முதல் 2002 வரை மாநிலம் ஒன்றுக்கு சராசரியாக 38 ஆக இருந்த மின்னல் பாதிப்பு மரணங்கள், 2003 முதல் 2020 வரை 61 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பிற இயற்கை பேரழிவுகளை காட்டிலும் இந்தியாவில் அதிக நபர்கள் மின்னல் பாதிப்புகளால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. 2022-ல் இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் ஏற்பட்ட 8,060 உயிரிழப்புகளில், சுமார் 2,887 உயிரிழப்புகளை மின்னல் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளன.
அதிலும் இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களான மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மின்னால் ஏற்படும் உயிரிழப்புகள் பிற மாநிலங்களைவிட அதிகளவில் உள்ளன. மிகவும் குறிப்பாக மழைக்காலங்களில் மட்டுமே மின்னல்களால் 85 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.