
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ இணையத்தளம் ஹிந்தியில் மாறியதாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளது எல்.ஐ.சி. நிர்வாகம்.
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் முதன்மையானது ஃலைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. இதன் அதிகாரபூர்வ இணையத்தளம் சமீபத்தில் ஹிந்திக்கு மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
www.licindia.in என்பது எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ இணையதளமாகும். இன்று (நவ.19) காலை தொடங்கி இந்த இணையத்தளத்தின் முகப்புப் பக்கம் முழுவதும் ஹிந்திக்கு மாறியிருந்தது. இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் `மொழி’ என ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையை அழுத்தி அதில் ஆங்கிலத்தைத் தேர்வு செய்தால் மட்டுமே எல்.ஐ.சி. இணையத்தளத்தின் முகப்புப் பக்கம் ஆங்கிலத்திறகு மாறும் வகையில் மாற்றப்பட்டிருந்தது.
இந்த மாற்றம் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் சில நேரங்களில் ஆங்கிலத்தை தேர்வு செய்தாலும், ஹிந்தி மொழியிலேயே எல்.ஐ.சி. இணையத்தளம் தொடர்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த மாற்றம் தொடர்பாக தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று (நவ.19) மாலை எல்.ஐ.சி.யின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக்கணக்கில் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு,
`எங்கள் நிறுவனத்தின் http://licindia.in இணையதளத்தில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாறவில்லை. இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது ஆங்கிலம்/ஹிந்தி மொழிகளில் இணையதளம் உள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்’.
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்புப் பக்கம் ஆங்கிலத்துக்கு மாறியுள்ளது. முகப்புப் பக்கத்தில் `மொழி’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையை அழுத்தி ஹிந்தி/மராத்தி மொழிகளுக்கு இணையதளத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் வசதி உள்ளது.