எல்.ஜி.பி.டி. பிரிவினர் என்று அழைக்கப்படும், தன் பாலின ஈர்ப்பாளர்கள், பால் புதுமையினர், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோர், கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்க எந்தத் தடையும் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
மத்திய அரசுக்கு எதிராக தன் பாலின ஈர்ப்பாளர்களான சுப்ரியோ (எ) சுப்ரியா சக்கரவர்த்தி மற்றும் அபய் தொடர்ந்த வழக்கில் 17 அக்டோபர், 2023-ல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பில், தன் பாலின ஈர்ப்பாளர்கள் அல்லது எதிர் பாலினத்தவர்கள் இருவர், திருமணம் செய்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமை கிடையாது என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
மேலும் இந்தத் தீர்ப்பில் எல்.ஜி.பி.டி. பிரிவினருக்கான உரிமைகளை உறுதி செய்வது தொடர்பாக மத்திய அரசுக்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் இந்த உத்தரவுகளின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 28-ல் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
அந்த அறிவிப்பாணையில், `எல்.ஜி.பி.டி. பிரிவினர் கூட்டு வங்கிக் கணக்கைக் திறக்க எந்த ஒரு தடையும் அமலில் இல்லை. சேர்ந்து வாழும் எல்.ஜி.பி.டி. பிரிவினர் தங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குத் தங்களின் இணையரை நாமினியாக நியமிக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து எல்.ஜி.பி.டி. பிரிவினர் எந்த ஒரு சமூகப் பாகுபாட்டுக்கும் ஆளாகாமல் இருக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றங்களும், வன்முறைகளும் நடைபெறாமல் இருக்கவும், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிட கடந்த ஏப்ரல் 2024-ல் மத்திய கேபினட் செயலாளர் தலைமையிலான 6 பேர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.