
கர்நாடக மாநிலத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தவேண்டும் என்று கன்னட வளர்ச்சி அமைப்பின் தலைவர் அம்மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
`மொழிப் பிரச்னை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், கர்நாடகத்தில் இருமொழிக் கொள்கைக்கான தேவை எழுந்துள்ளது. அரசு மட்டத்தில் இது தொடர்பான பொருத்தமான முடிவை எடுப்பதற்காக உங்களின் ஆலோசனையைக் கோருகிறேன்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார் கன்னட வளர்ச்சி அமைப்பின் புருஷோத்தம பிளிமலே.
ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, நம்ம நாடு நம்ம ஆள்விக்கே அமைப்பின் தலைவர் ரமேஷ் பெல்லன்கொண்டா சமர்ப்பித்த மனுவையும் முதல்வருக்கு அனுப்பியுள்ளார் புருஷோத்தம பிளிமலே.
கர்நாடக மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிப் பாடங்கள் கட்டாயத் தாள்களாக உள்ளன. இதனால் 10-ம் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தடைபடுவதாகவும் கூறி, ஹிந்தியை கட்டாய மொழிப் பாடமாக உள்ள நடைமுறையை மாற்றக்கோரி கர்நாடக மாநில பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்து அண்மையில் மனு அளித்தார் ரமேஷ் பெல்லம்கொண்டா.
மொழிரீதியிலான சமத்துவமின்மையும், அநீதியும் நிலவுவதாகவும், ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்தே, கர்நாடகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை, ஹிந்தி எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்து தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதை அடுத்து, மற்றொரு தென் மாநிலமான கர்நாடகத்தில் இருமொழிக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகள் கவனம்பெற்றுள்ளன.