
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மாநிலங்களவை எம்.பி.யாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின்றன.
நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி. 22 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருந்தாலும், புது தில்லி தொகுதியில் தோல்வியடைந்தார் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். தில்லியில் ஆட்சியை இழந்திருந்தாலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் உடன் தில்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் இன்று (பிப்.11) அவசர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார் கெஜ்ரிவால். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில், 93 இடங்கள் ஆளும் ஆம் ஆத்மி வசம் உள்ளன. காங்கிரஸ் வசம் 16 இடங்களும், அகாலி தளம் வசம் 3 இடங்களும், பாஜக வசம் இரண்டு இடங்களும் உள்ளன.
இந்நிலையில், 30 ஆம் ஆத்மி பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என பஞ்சாப் காங்கிரஸ் கூறுகிறது. அதேநேரம், முதல்வர் பகவந்த மானை மாற்றிவிட்டு கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக முயற்சிக்கிறார் எனப் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகியின் மறைவை அடுத்து லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. இதற்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால் முயற்சி செய்கிறார் என்பது பாஜக குற்றச்சாட்டின் அடிப்படையாக உள்ளது.
ஆனால், பஞ்சாபில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம் என செய்திகள் வெளிவருகின்றன. மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்திற்கென மொத்தம் 7 எம்.பி. இடங்கள் உள்ளன.
இந்த 7 எம்.பி.க்களும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், பஞ்சாப் சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளதால் மாநிலங்களவைக்கு கெஜ்ரிவால் சுலபமாக தேர்வு செய்யப்படுவார்.
பஞ்சாப் சட்டப்பேரவையா அல்லது பஞ்சாபிலிருந்து மாநிலங்களவையா என்ற கெஜ்ரிவாலின் முடிவு இன்னும் சில நாட்களில் தெரியக்கூடும்.