கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி இன்று (ஆகஸ்ட் 4) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தீவிரமாகப் பெய்து வந்த தென் கிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த ஜூலை 30 அதிகாலை 2 மணி தொடங்கி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 6-வது நாளாக இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி இன்று பார்வையிட்டார். முதலில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கையின் பூஞ்சிரிமட்டத்துக்கு அமைச்சர் சுரேஷ் கோபி அங்கு நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் கோபி, `வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால் முதலில் அதற்கான சட்ட அம்சங்களை ஆராய வேண்டும். தற்போதைய நிலைமையில் மீட்கப்பட்டவர்கள் புனர்வாழ்வுக்கும், அவர்கள் மனநிலையை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீட்புப் பணிகளுக்குக் கூடுதல் படைகள் தேவைப்பட்டால் அது குறித்து கேரள அரசு மத்திய அரசுக்கு முறையாக கோரிக்கை விடுக்க வேண்டும்’ என்றார்.
முன்பு கேரள ஆளுநர் முஹம்மது ஆஃரிப் கானும், முதல்வர் பினராயி விஜயனும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். வயநாடு நிலச்சரிவில் இதுவரை 365 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 205 பேரைக் காணவில்லை எனவும் கேரள மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.