
கடந்த ஜூலை 9 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தலைவர்கள் 75 வயதில் ஓய்வுபெறவேண்டும் என்று கூறினார். பகவத்தின் இந்த கருத்து பிரதமர் மோடியை முன்வைத்து கூறப்பட்டதாக பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மறைந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான மொரோபந்த் பிங்லே குறித்த `மோரோபந்த் பிங்லே: தி ஆர்கிடெக்ட் ஆஃப் ஹிந்து ரிசர்ஜென்ஸ்’ என்கிற புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
அப்போது, `ஒருவர் மீது 75 வயது சால்வை போர்த்தப்பட்டுவிட்டால், அவர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்டார் என்றும், அவர் ஒதுங்கிக்கொண்டு மற்றவர்கள் வேலைசெய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் பிங்லே கூறினார்’ என்று தனது உரையில் பகவத் குறிப்பிட்டார்.
பகவத்தின் இத்தகைய கருத்தை முன்வைத்து, ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். தன் எக்ஸ் தள பதிவில், `செப்டம்பர் 17, 2025 அன்று அவருக்கு (மோடிக்கு) 75 வயதாகிறது என்பதை நாடு திரும்பியதும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நினைவூட்டினார்’ என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதம், பிரதமர் மோடி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்குச் சென்றார்.
அது குறித்து அப்போது கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத், `எனக்குத் தெரிந்தவரை, கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில் அவர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. தலைமையில் மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. பிரதமர் மோடி தற்போது புறப்படப் (ஓய்வுபெற) போகிறார்’ என்றார்.
75 வயதுக்கு பிறகு மத்திய, மாநில அமைச்சர், மாநில முதல்வர், எம்.பி. எம்.எல்.ஏ. பதவிகளில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த நபர்கள் கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற எழுதப்படாத விதி பாஜகவில் பின்பற்றப்படுவதாக பல ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது.
இதன்படி 75 வயது பூர்த்தியடைந்த தவார் சந்த் கெலாட், சந்தோஷ் குமார் கங்குவார் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதை முன்வைத்தே, ஆர்.எஸ்.எஸ். தலைவர் அண்மையில் தெரிவித்த கருத்து, பிரதமர் மோடியின் ஓய்வை வைத்து கூறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அதேநேரம் மோடி, பகவத் இருவருமே வரும் செப்டம்பர் மாதம் 75 வயதை எட்டுகிறார்கள். அவர்களின் பிறந்தநாளுக்கு இடையே ஆறு நாள்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.