
வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை தனிப் பட்டியலாகத் தயாரிக்கவோ அல்லது அவற்றைப் பகிரவோ அல்லது வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களை வெளியிடவோ, சட்டம் தங்களை கட்டாயப்படுத்தவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்மையில் பிஹார் மாநில வாக்குப் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதன் முடிவில் இறப்பு, நிரந்தரமாக மாநிலத்தை விட்டு வெளியேறியது, போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது அல்லது கண்டுபிடிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பிஹார் வாக்குப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலை வாக்குச்சாவடி வாரியாக வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் நேஹா ரதி ஆகியோர் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இத்தகைய பதிலை அளித்துள்ளது.
குறிப்பாக, `உரிமையின் அடிப்படையில் மனுதாரர் அத்தகைய பட்டியலைக் கோர முடியாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் துணை பிரமாணப் பத்திரத்துடன் கூடுதலாக தாக்கல் செய்த தனி பதிலில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதற்காக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
தங்கள் தரப்பு வாதத்தை வலுப்படுத்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் (RER), 1960-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள விதிகள் 10 மற்றும் 11 ஆகியவற்றை தேர்தல் ஆணையம் மேற்கோள்காட்டியது.
`வரைவு வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டவுடன், அதன் நகல் வாக்காளர் பதிவு அதிகாரியின் (ERO) அலுவலகத்திற்கு வெளியே ஆய்வுக்குக் கிடைக்கவேண்டும்’ என்று விதி 10 குறிப்பிடுகிறது.
மேலும், `வரைவுப் பட்டியலின் ஒவ்வொரு தனிப் பகுதியையும் அந்தப் பகுதி தொடர்புடைய இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அணுகக்கூடிய வகையில் அளிக்கவேண்டும், மேலும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கும் பட்டியலின் ஒவ்வொரு தனிப் பகுதியின் இரண்டு நகல்களை வழங்கவேண்டும்’ என்று மட்டுமே விதி 11 குறிப்பிடுகிறது.
இந்த இரு விதிகளுக்கும் இணங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.