

மகன் தேஜஸ்வி யாதவ், மகள் ரோஹினி ஆச்சார்யா இடையிலான பிரச்னையை தான் பார்த்துக் கொள்வதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் எம்எல்ஏ-க்களிடம் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் களமிறங்கிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் மட்டும் வென்று தோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேஜஸ்வி யாதவ் மற்றும் அவருடைய மூத்த சகோதரி ரோஹினி ஆச்சார்யா இடையே கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, குடும்பத்திலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகுவதாக ரோஹினி ஆச்சார்யா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பிறகு விளக்கமளிகையில், "எனக்கு இனி குடும்பம் கிடையாது. சஞ்சய், ரமீஸ் மற்றும் தேஜஸ்வி யாதவைப் போய் கேளுங்கள். பொறுப்பேற்றுக்கொள்ள விருப்பமில்லாததால், அவர்கள் என்னை குடும்பத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டார்கள். சஞ்சய் மற்றும் ரமீஸ் பெயரை எடுத்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள், அவமரியாதை செய்யப்படுவீர்கள், காலணிகளால் தாக்கப்படுவீர்கள்" என்றார் ரோஹினி ஆச்சார்யா.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மூத்த மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
தேஜஸ்வி - ரோஹினி இடையிலான பிரச்னை குறித்து பேசும்போது, "இது குடும்பப் பிரச்னை, குடும்பத்துக்குள்ளேயே இது தீர்த்துக் கொள்ளப்படும். இதைத் தீர்த்து வைக்க நான் இருக்கிறேன்" என்று லாலு பிரசாத் யாதவ் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேஜஸ்வி யாதவ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ் உள்பட மொத்தம் 9 பிள்ளைகள். மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் ரோஹினி இடையிலான பிரச்னை குறித்து லாலு பிரசாத் யாதவ் முதல்முறையாக திங்கள்கிழமை மௌனம் கலைத்துள்ளார்.
Lalu Prasad Yadav opened up for the first time on feud between his son Tejashwi Yadav and daughter Rohini Acharya.
Lalu Prasad Yadav | Tejashwi Yadav | Rohini Acharya | Rashtriya Janata Dal | RJD |