இன்று (ஆகஸ்ட் 4) காலை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கொர்பா - விசாகப்பட்டினம் (18517) ரயிலில் திடீரெனத் தீப்பிடித்தது. இதனால் ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்தன.
காலை 10 மணிக்கு நடந்த இந்த தீ விபத்துச் சம்பவத்தை அடுத்து, விரைவாகத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து சம்பவம் குறித்துப் பேட்டியளித்த விசாகப்பட்டினம் மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ப்ரத்தா, `காலை 6.30 மணி அளவில் கொர்பா ரயில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. 9.20 மணி அளவில் ஒரு பெட்டியில் தீப்பற்றி, பின் படிப்படியாக பிற பெட்டிகளுக்குத் தீ பரவ ஆரம்பித்தது. தீ விபத்து சம்பவத்தின்போது ரயில் பெட்டிகள் காலியாக இருந்தன’ என்றார்.
மேலும், `இந்தத் தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த உள்ளோம். தடயவியல் துறை வல்லுனர்களை அழைத்து தீ விபத்துக்கான காரணத்தை ஆராய உள்ளோம். ஆதாரங்களை ஆராய்ந்த பிறகுதான் தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும். தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை’ என்றார் சங்கர் ப்ரத்தா.
`ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்பிஃப் வீரர்கள் முதலில் கரும்புகையை கவனித்தனர். அதன் பிறகு உடனடியாகத் தீ அணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 11.10 மணி அளவில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’ என்று ரயில் நிலைய அதிகாரி ஒருவர் பேட்டியளித்தார்.