கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது சியல்டா நீதிமன்றம்.
இன்று (ஆகஸ்ட் 23) காலை கொல்கத்தாவின் சியல்டா நிதிமன்றத்தில், கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் முன்பு காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார் சஞ்சய் ராய். ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்தார் சஞ்சய் ராய்.
சியல்டா நீதிமன்றத்துக்கு சஞ்சய் ராயை அழைத்து வருவதை ஒட்டி காலை முதலே நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சஞ்சய் ராய் மீதான விசாரணையை கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் தன் அறையில் வைத்து மேற்கொண்டார்.
ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து ஆகஸ்ட் 8-ல் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10-ல் இந்த படுகொலை குறித்த நீண்ட விசாரணைக்கு பிறகு கொல்கத்தா நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் சஞ்சய் ராய். அப்போது அவரது உடலில் இருந்த காயங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த படுகொலை வழக்கு மீதான விசாரணை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, சிபிஐ கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் ராய். அதன் பிறகு சிபிஐ அதிகாரிகள் சஞ்சய் ராயிடம் விசாரணை மேற்கொண்டனர்
இந்த படுகொலை வழக்கு தொடர்பாக ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் சந்தீப் கோஷிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளது சிபிஐ.